தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்?

29.03.2026 12:49:40

தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் - பாஜக கட்சிகள் நேரடியாக 4 தொகுதிகளில் எதிர்த்து நிற்கின்றன. அந்த தொகுதிகள் என்னென்ன? தொகுதியின் நிலவரம் என்ன? வெற்றி வாய்ப்பு யாருக்கு சாதகமாக உள்ளது? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம். தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அன்றைய தினம் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 4ம் தேதி ரிசல்ட் வெளியாக உள்ளது.

தேசிய அரசியலில் காங்கிரஸ் - பாஜக எதிரெதிர் துருவங்களாக உள்ளன. இப்போது இரு கட்சிகளும் தமிழக அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் திமுக - அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2021 சட்டசபை ஒப்பிடும்போது 3 தொகுதிகள் அதிகமாகும். அதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. பாஜகவிற்கு 27 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2021 சட்டசபை தேர்தலை ஒப்பிடும்போது 7 தொகுதிகள் அதிகமாகும்.

இந்நிலையில் தான் தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் - பாஜக கட்சிகள் நேரடியாக 4 தொகுதிகளில் மோத உள்ளன. அந்த தொகுதிகள் என்னனென்ன? யார் எம்எல்ஏவாக உள்ளனர்? இந்த தேர்தலில் வெல்ல அதிக வாய்ப்பு யாருக்கு இருக்கிறது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

இதில் முதலில் நாம் பார்க்கும் தொகுதி ஊட்டி. நீலகிரி மாவட்டத்தில் இந்த தொகுதி உள்ளது. 15 தேர்தல்களில் இந்த தொகுதியில் 10 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. சுவதந்திரா கட்சி ஒருமுறையும், திமுக, அதிமுக கட்சிகள் தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 2016, 2021ம் ஆண்டுகளில் காங்கிரஸ் வேட்பாளர் கணேஷ் வெற்றி பெற்றார். தற்போது அவர் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளார். இவர் கடந்த முறை 65,530 ஓட்டுகள் வாங்கிய நிலையில் பாஜக வேட்பாளர் போஜராஜன் 60,182 வாக்குகள் வாங்கினார். இதனால் காங்கிரஸின் கணேஷ் 5,348 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் இந்த முறை இந்த தேர்தலில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி இருக்கும்.

அடுத்ததாக நாம் பார்க்கும் தொகுதி அறந்தாங்கி. இந்த தொகுதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இங்கு சி்டடிங் எம்எல்ஏவாக ராமச்சந்திரன் உள்ளார். கடந்த 2021 தேர்தலில் ராமச்சந்திரன் 81,835 வாக்குகள் வாங்கி அதிமுக வேட்பாளர் ராஜநாயகமை (பெற்ற வாக்குகள் 50,942) 30,893 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தார்.

இந்த முறை பாஜக - காங்கிரஸ் போட்டியிடுகிறது. மீண்டும் சிட்டிங் எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கு காங்கிரஸ் வாய்ப்பு கொடுக்கலாம். இங்கு பாஜகவுக்கு கட்டமைப்பு இல்லை என கூறப்படுவதால் காங்கிரஸே மீண்டும் வெல்லலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்த வரிசையில் 3வது பார்க்கும் தொகுதி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல். இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ளது. கடந்த 2006, 2011, 2016, 2021 என தொடர்ந்து 4 தேர்தல்களில் காங்கிரஸ் வென்றுள்ளது. இதில் 2011, 2016, 2021ல் பிரின்ஸ் வெற்றி பெற்றார். தற்போது அவர்தான் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளார்.

2021 தேர்தலில் பிரின்ஸ் 90,681 வாக்குகள் பெற்று வாகை சூடினார். அவரை எதிர்த்து களமிறங்கிய பாஜகவின் ரமேஷ் 65,849 ஓட்டுகள் வாங்கியிருந்தார். இதனால் பிரின்ஸ் 24,832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ளது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளது. இதனால் பாஜகவை விட மீண்டும் காங்கிரஸ் கட்சியின் கையே ஓங்கி இருக்க வாய்ப்புள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ளது. 20011, 2016, 2021ல் காங்கிரஸ் சார்பில் விஜயதாரணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் சேர்ந்தார். இதனால் கடந்த 2024ல் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்வர்ட் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தான் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளார்.

அந்த தேர்தலில் தாரகை கத்வர்ட் 91054 ஓட்டுகள் வாங்கிய நிலையில் அவரை எதிர்த்து விஜயதாரணி போட்டியிடவில்லை. பாஜக சார்பில் நந்தினி களமிறங்கினார். அவர் 50,880 ஓட்டுகள் வாங்கியிருந்தார். இதனால் தாரகை கத்வர்ட் 40,174 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்த தேர்தலில் பாஜகவில் மீண்டும் விஜயதாரணி போட்டியிட வாய்ப்புள்ளது. இதனால் இந்த தொகுதியில் வெல்வது யார்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏனென்றால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.