எலக்சன் - விமர்சனம்
எலக்சன் - விமர்சனம்
தயாரிப்பு : ரீல் குட் ஃபிலிம்ஸ்
நடிகர்கள் : விஜய் குமார், ப்ரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, பாவெல் நவகீதன், திலீபன், ஜார்ஜ் மரியான் மற்றும் பலர்.
இயக்கம் : தமிழ்
மதிப்பீடு : 3/5
'உறியடி', 'ஃபைட் கிளப்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகரும், சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று' படத்தின் வசனகர்த்தாவுமான நடிகர் விஜய்குமார் நடித்திருப்பதாலும், எளிய மனிதர்களின் உணவு அரசியலை 'சேத்து மான்' படத்தின் மூலம் பேசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படைப்பாளி தமிழ் இயக்கியிருப்பதாலும், தேர்தல் அரசியல் பின்னணியில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருப்பதாலும், 'எலக்சன்' என பெயரிடப்பட்டிருப்பதாலும், இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அந்த எதிர்பார்ப்பை இந்த 'எலக்சன்' பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
தமிழில் அடர்த்தியான அரசியல் பேசும் திரைப்படங்கள் வெளியாவது அரிது. அதிலும் இந்த 'எலக்சன்' திரைப்படத்தில் பேசப்பட்டிருக்கும் உள்ளாட்சி தேர்தல் விடயம் தமிழ் திரையுலகத்திற்கு புதிது. இதுவரை உள்ளாட்சித் தேர்தலை திரைக்கதைக்காக பயன்படுத்திய படைப்பாளிகள் அதிகம். ஆனால் அதனையே கதைக்களமாக கொண்டு... தேர்தல் என்பது ஒரு கட்சியின் அடிமட்ட தொண்டனுக்கு எம்மாதிரியான அரசியல் சார்ந்த விடயம் என்பதை விவரித்திருப்பது சுவராசியமானதாக இருக்கிறது.
அப்பாவியான சராசரி இளைஞன் ஒருவன் எப்படி குற்றப் பின்னணியுடன் அரசியல்வாதி ஆகிறான் என்பதுதான் படத்தின் கதை. கட்சிக்கு விசுவாசமாக உழைக்கும் அடிமட்ட தொண்டனின் வாரிசு அரசியலில் களமிறங்கினால்... எம்மாதிரியான அனுபவங்களை எதிர்கொள்கிறான் என்பதை உணர்வுபூர்வமான திரைக்கதை மூலம் விவரித்திருக்கிறார் இயக்குநர் தமிழ்.
மக்களவைத் தேர்தல், மாநிலங்களுக்கான சட்டப்பேரவை பொதுத் தேர்தல், இடைத்தேர்தல் ஆகிய தேர்தல்களை விட கிராமப்புற பகுதிகளில் ஊராட்சிக்கு நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் வித்தியாசமானது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் தான் ஒரே ஊரில் இருக்கும் அரசியல்வாதிகளின் பகை உணர்வு- உட்கட்சிப் பூசல்- தனது அரசியல் செல்வாக்கினை நிரூபிப்பதற்காக அரசியல்வாதிகள் எடுக்கும் முடிவுகள்- கட்சிக்கும், கட்சித் தலைமைக்கும் விசுவாசமாக இருக்கும் தொண்டர்கள்- பகுதி பிரதிநிதிகள்- மக்களின் ஆதரவால் தொடர்ந்து தலைவர் பதவியை வகித்து, அந்த பதவி தந்த சுகத்தில் மதமதப்புடன் இருக்கும் தலைவர்கள் -மோசமான அரசியல்வாதிகள்- கொள்கை அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்ளும் சீர்திருத்தவாதிகள் -வாக்குகளை பிரிப்பதற்காக அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் உத்தி- தேர்தல் அரசியலை தெரியாத ஆனால் அரசியலில் ஈடுபடும் நபர்கள்... என பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் இந்த 'எலக்சன்' திரைப்படத்தை கூடுமானவரை பார்வையாளர்களிடம் தேர்தல் அரசியல் குறித்த நம்பகத்தன்மையை இயக்குநர் ஏற்படுத்தியிருக்கிறார். இதற்கு ஒளிப்பதிவாளர், வசனகர்த்தா, படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் உள்ளிட்ட தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருக்கிறார்கள்.
அரசியலைப் பற்றி ஆழமாகவும், விரிவாகவும் பேசும் இந்த திரைப்படத்தில் நாயகன் அப்பாவி. அரசியல் தெரியாதவர். சராசரி என்பதற்காக அவரை ஒரு பெண்ணை காதலிக்க வைத்து அதற்காக பாடல்களை இணைத்திருப்பது ரசிகர்களிடம் வெறுப்பை ஏற்படுத்துகிறது.
படத்தின் உச்சகட்ட காட்சி மக்களுக்கு தேர்தல் அரசியல் குறித்தும், தேர்தல் எவ்வளவு அவசியமானது என்பது குறித்தும் உணர்வுபூர்வமாக விவரிக்கப்பட்டிருப்பதால் அது தொடர்பான விழிப்புணர்வு மக்களிடத்தில் ஏற்படும். அப்படி ஏற்பட்டிருந்தால்.. அதனை படத்தின் வெற்றியாக கருதலாம்.
நடராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் குமார் அப்பாவி இளைஞனை விட அரசியல்வாதியாக நடிப்பதில் மிளிர்கிறார். வன்முறையை கையில் எடுக்கும் போது.. இன்னும் கூடுதலாக சிறந்த நடிப்பை அவரிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 'அயோத்தி' மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை ப்ரீத்தி அஸ்ராணி- இந்த திரைப்படத்திலும் அழுத்தமான வேடத்தில் நடித்து தன் பங்களிப்பை நிறைவாக வழங்கியிருக்கிறார்.
இவர்கள் இருவரையும் விட கதைக்கு அச்சாணியாக இருக்கும் நடராஜின் தங்கை கணவராக கனி எனும் வேடத்தில் நடித்திருக்கும் பாவெல் நவகீதனின் நடிப்பு 'தரமான சம்பவம்'. அதேபோல் கட்சிக்கு விசுவாசமான தொண்டன் நல்ல சிவமாக நடித்திருக்கும் நடிகர் ஜோர்ஜ் மரியானின் நடிப்பும் சிறப்பு. இதைப் போன்றதொரு கதாபாத்திரத்தை நாம் எம் மண்ணிலும் சந்தித்திருக்கிறோம். அதனால் நல்ல சிவம் எளிதில் நம் மனதில் இடம் பிடிக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் திலீபனின் வருகை இரண்டாம் பகுதியில் திடீரென்று நிகழ்ந்தாலும்.. தன் சிறப்பான நடிப்பை வழங்கி மனதில் நிற்கிறார்.
தேர்தல் என்றால் வாக்காளர்களின் மனதில் இருக்கும் அனைத்து அரசியலும் இந்த திரைக்கதையிலும் இடம் பிடித்திருப்பதால் இந்த திரைப்படத்தை ரசிக்க முடிகிறது. அதிலும் குறிப்பாக 'அரை காசுக்கு போன மானம் அரை பவுனு கொடுத்தாலும் வராது' என்ற வசனம் பார்வையாளர்களின் மனதை கவர்கிறது. இதற்காக வசனம் எழுதிய எழுத்தாளர் அழகியப் பெரியவனை பாராட்டலாம்.
உள்ளாட்சி தேர்தல் என்பது அது ஒரு அரசியல் சார்ந்த விடயம் என்ற எல்லையை கடந்து.. அதன் மூலம் கிடைக்கும் அதிகாரம் தனித்துவமானது. விசேடமானது. எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கான நலன் சார்ந்தது. அதற்காக குடும்ப உறவுகளுக்குள் அரசியல் புகுந்து விரிசலையும் ஏற்படுத்தும். விசாலமாகத் திகழும் அன்பையும் சுருங்க வைத்துவிடும். வாக்கிற்காக வன்முறையையும் கையிலெடுக்கும்...என்ற யதார்த்த உண்மையை முகத்தில் அடித்தார் போல் சொல்லி இருப்பதால் இந்தப் படம் பார்வையாளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரவேற்பைப் பெறும். 'அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை' என்ற ஒரு பழமொழி உண்டு. இந்தத் திரைப்படம் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது.