செப்.6 வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

22.08.2021 14:57:56

தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு நாளை 23ம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைவதையடுத்து, தலைமை செயலகத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, நிதி துறை செயலாளர் கிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் குமார்ஜெயந்த், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பள்ளி கல்வி துறை செயலாளர் காகர்லா உஷா, உயர் கல்வி துறை செயலாளர் கார்த்திகேயன், பொதுத்துறை செயலாளர் ஜெயகாந்தன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: கடந்த முறை எடுக்கப்பட்ட முடிவுகள், தற்போதுள்ள நோய் தொற்று நிலையின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டன.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள கோவிட்-19 நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் 06. 09. 2021 காலை 6 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, 1-9-2021 முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படும்.

பள்ளிகளில் மதிய உணவு திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். உயர் வகுப்புகள் செயல்படுவதை கவனித்து அதன் அடிப்படையில், மழலையர் வகுப்புகள், 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை 15-9-2021-க்கு பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்.

மேலும், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுடன் பின்வரும் செயல்பாடுகள் அனுமதிக்கப்படுகின்றன: அனைத்து கல்லூரிகளும் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும்.