துரோகி எடப்பாடியுடன் பயணிக்க வாய்ப்பே இல்லை: டிடிவி அறிவிப்பு

12.03.2024 07:54:19

திருச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அளித்த பேட்டி: பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலை மற்றும் டெல்லியில் வந்திருக்கும் முன்னாள் அமைச்சர் கிஷன்ரெட்டியுடன் நேரில் சந்திக்க முடியாத காரணத்தால், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அதில் பாஜ-அமமுக இடையிலான கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டது. கடந்த 3 மாதங்களாகவே அமமுக-பாஜ இடையிலான கூட்டணி பேச்சு நடந்து வருவது அனைவரும் அறிந்ததே.

அமமுக-வின் தேவைகள் என்ன என்பதை எங்கள் தரப்பில் இருந்து ஏற்கனவே நாங்கள் கடிதம் வாயிலாக தெளிவாக எடுத்துக்கூறி விட்டோம். பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ளோம். எந்தந்த தொகுதி, எத்தனை தொகுதி என்பதில் எங்களுக்குள் எவ்வித இழுபறியும் கிடையாது. எங்கள் தேவை எப்போதும் நியாயமானதாகவே இருக்கும். அவர்களுக்கும் அது நன்கு தெரியும். விரைவில் அது குறித்து அறிவிப்போம். தாமரை சின்னத்தில் நிற்க சொல்வதாக கூறுவதில் உண்மை இல்லை. நாங்கள் ஒரு மாநில கட்சி.

தேர்தல் கமிஷன் எங்களுக்கு என குக்கர் சின்னம் ஒதுக்கியுள்ளது. எங்களை ஒருவரும் இதுவரை இந்த சின்னத்தில்தான் நிற்க வேண்டும் எனக்கூறியது இல்லை. அதற்கான நிர்ப்பந்தமும் ஏற்பட்டது இல்லை. அடுத்து வரும் தினங்களில் அதிமுக-பாஜ கட்சி கூட்டணி அமைந்து, அதிமுக வேட்பாளருக்கு ஆதராவாக ஓட்டு கேட்கும் நிலை வந்தால், எங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை, அப்போது பார்த்துக்கொள்ளுங்கள். பழனிச்சாமி ஒரு துரோகி. அவருடன் எந்த காலத்திலும் சேர்ந்து பயணிக்க வாய்ப்பே இல்லை. துரோக புத்தியை திருத்திக்கொண்டு திருந்திய பழனிச்சாமியாக வந்தால் ஏற்றுக்கொள்வோம்டிடிவி-யை பாஜவினர் நன்கு புரிந்து வைத்துள்ளனர். இந்நிலை வரும் காலங்களிலும் தொடரும்.