தலைமுடியை பிடித்து சண்டை போட்ட நடிகை

01.03.2023 15:47:05

கனடாவில் பிறந்து வளர்ந்தவர் நோரா பதேகி. தற்போது மும்பையில் தங்கி இந்திய சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தி டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். கடந்த 2014ம் ஆண்டு வெளியான ரோர்- டைகர்ஸ் ஆப் தி சுந்தர்பான்ஸ் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் நோரா பதேஹி. எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி உள்ளார். வம்சி பைடிபல்லி இயக்கத்தில் கார்த்தி நடித்த தோழா படத்தில் டோர் நம்பர் பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர் நோரா பதேகி தான். தற்போது அவர் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பெரும்பாலும் குத்துப் பாடல்களுக்கு ஆடி வருகிறார். குத்துப் பாட்டா கூப்பிடு நோராவை என்று இயக்குநர்கள் சொல்லும் அளவுக்கு நன்றாக டான்ஸ் ஆடுவார். மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி பணம் பறித்த வழக்கில் பல நடிகைகள் ஏற்கனவே விசாரிக்கப்பட்டனர்.. வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட மற்றொரு நடிகை நோரா பதேகி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் விசாரிக்கப்பட்டார். அப்போது, தனக்கும், இந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்தார். சுகேசுடனான தனது வாட்ஸ்-அப் உரையாடல் பதிவுகளையும் காண்பித்தார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் கலந்து கொண்டார். இரண்டு வெப்தொடர்களிலும் நடித்திருக்கிறார் நோரா. ஆயுஷ்மான் குரானாவின் ஆக்ஷன் ஹீரோ படத்தை விளம்பரம் செய்ய தி கபில் சர்மா நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நோரா பதேகி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் அப்பொழுது சொன்னது பற்றி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கபில் சர்மா நிகழ்ச்சியில் நோரா பதேகி கூறியதாவது:- என் முதல் படத்திற்காக சுந்தர்பான்ஸ் காடுகளில் ஷூட்டிங் நடந்தது. நான் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அப்பொழுது சக நடிகர் ஒருவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். நான் கடுப்பாகி அவரை ஓங்கி அறைந்துவிட்டேன். உடனே பதிலுக்கு என்னை அறைந்தார். என்னை அறைந்ததுடன் என் தலைமுடியை பிடித்து இழுத்தார். நானும் அவரின் தலைமுடியை பிடித்து இழுத்தேன். அது ரொம்ப மோசமான சண்டையாக இருந்தது என்றார். இப்படி ஒரு அதிர்ச்சிகரமான விஷயத்தை சர்வ சாதாரணமாக சிரித்துக் கொண்டே கூறினார் நோரா பதேஹி. அதை கேட்ட கபில் சர்மாவோ, அந்த நடிகர் நிச்சயம் கஷ்டப்படுவார் என்றார். கண்டிப்பாக, அந்த நாய் என்று கூறினார் நோரா பதேகி.