அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் விரைந்து முழுமையாக நலம் பெற விழைகிறேன்

16.07.2022 11:57:53

லேசான கொரோனா தொற்று காரணமாக ஓ.பி.எஸ். மருத்துவமனையில் அனுமதி. முழுமையாக நலம் பெற முதலமைச்சர் வாழ்த்து. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில நாட்களாக கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இரவு-பகலாக ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். இந்த நிலையில் அவருக்கு லேசான சளி, இருமல் ஏற்பட்டதால் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் பரிசோதனை செய்தார்.

அதில் அவருக்கு கொரோனா தொற்று லேசாக இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் விரைந்து நலம் பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் விரைந்து முழுமையாக நலம் பெற விழைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.