தடுப்பூசி பற்றி வதந்தி பரப்பிய 'பேஸ்புக்' கணக்கு முடக்கம்

14.08.2021 09:13:24

கொரோனா தடுப்பூசி குறித்து சமூக ஊடகங்களான 'பேஸ்புக், டுவிட்டர்' ஆகியவற்றில் வதந்தி பரப்பிய 308 பேரின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆஸ்ட்ராஜெனகா பைசர் நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி மருந்து குறித்து பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் சிம்பன்சி குரங்கின் மரபணுவில் இருந்து தடுப்பூசி தயாரித்துள்ளதாகவும் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்வோர் பக்க விளைவால் பாதிக்கப்பட்டு குரங்காக மாறி விடுவர் என்றும் வதந்தி பரப்பப்பட்டுள்ளது.

இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இத்தகைய வதந்திகளை விஷமிகள் பரப்பி வருவது பேஸ்புக் நிறுவனத்தின் கவனத்திற்கு வந்தது.இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில் ரஷ்யாவில் இருந்து பல்வேறு சமூக ஊடகங்கள் வழியாக ஒரே வாரத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வதந்தி தகவல்கள் பதிவேற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து வதந்தி பரப்பிய 308 பேரின் பேஸ்புக் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.