15 மில்லியன் ரூபாவை இழப்பீடாக செலுத்தினார் மைத்திரி

11.07.2023 23:12:25

முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் மனித உரிமை மீறப்பட்டமையால் 100 மில்லியன் ரூபா இழப்பீட்டை செலுத்துமாறு உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய, அவர் 15 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் சமர்ப்பித்த பிரேரணையில், முன்னாள் அதிபர் என்ற ரீதியில் மாதாந்தம் 97,500 ரூபா ஓய்வூதியம் பெறுவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 54,285 ரூபாயையும் பெறுவதாக கூறியிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

இதற்கமைய, உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட 100 மில்லியன் ரூபாய் இழப்பீட்டு தொகையில் கடந்த ஜூன் மாதம் 28 ஆம் திகதி 10 மில்லியன் ரூபாயும் பின்னர் 5 மில்லியன் ரூபாய் அடிப்படையில் 15 மில்லியன் ரூபாயும் இழப்பீடாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதியத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள இழப்பீட்டை தலா 85 லட்சம் ரூபாய் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு ஜூன் 30 முதல் 2033 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 வரை 10 தவணைகளில் வருடாந்தம் வழங்குவதற்கு அனுமதிக்குமாறும் முன்னாள் அதிபர் தனது பிரேரணையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அடிப்படை உரிமை மனுக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட 12 அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான தீர்ப்பை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஏழு பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு கடந்த ஜனவரி 12 ஆம் திகதி அறிவித்திருந்தது.

மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாயும், முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா 75 மில்லியன் ரூபாயும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாயும், முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் 10 மில்லியன் ரூபாயும் இழப்பீட்டாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

6 மாத கால அவகாசம்

நட்டஈடு வழங்க அன்றிலிருந்து 6 மாத கால அவகாசம் வழங்கவும் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் அறிவித்திருந்தது.

 

இதன்படி, முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன 15 மில்லியன் ரூபாவையும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 1 மில்லியன் ரூபாவையும், முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர 1,725,588 ரூபாவையும் இழப்பீட்டை செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மெண்டிஸும் 05 மில்லியன் ரூபா இழப்பீட்டை செலுத்தியுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

அத்துடன் அரசாங்கம் சார்பில் திறைசேரி ஒரு மில்லியன் ரூபாய்  இழப்பீட்டை வழங்கியுள்ளது.

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன இதுவரை நட்டஈடு வழங்கியதாக தெரிவிக்கப்படவில்லை என அந்த அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்த இழப்பீடுகள் அனைத்தும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தில் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.