இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றது தென்னாபிரிக்கா!
இங்கிலாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, 2-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி கைப்பற்றியுள்ளது.
அதேவேளை கடந்த 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்துள்ளது.
மங்காங் ஓவல், ப்ளூம்ஃபோன்டைன் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 342 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காது 94 ஓட்டங்களையும் ஹரி புரூக் 80 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், நோக்கியா 2 விக்கெட்டுகளையும் பார்னெல், லுங்கி ங்கிடி, மார்கோ ஜென்ஸன், மஹாராஜ் மற்றும் மார்கிரம் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 343 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, 49.1 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டெம்பா பவுமா 109 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், ஹொலி ஸ்டோன் மற்றும் அடில் ராஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சேம் கர்ரன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 102 பந்துகளில் ஒரு சிக்ஸர் 14 பவுண்ரிகள் அடங்களாக 109 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட டெம்பா பவுமா தெரிவுசெய்யப்பட்டார்.