இலங்கையை கட்டியெழுப்பும் நிதியம் - சட்டரீதியாக உருவாக்கப்பட்டதா?
|
பேரிடருக்கு பின்னர் இலங்கையை கட்டியெழுப்பும் நிதியம் ஒன்று ஜனாதிபதி செயலகத்தால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்று சர்வதேசத்துக்கு குறிப்பிடப்படுகிறது. அவ்வாறு ஒன்றும் இல்லை என்று நான் குறிப்பிடுகிறேன். சட்டத்தால் ஸ்தாபிக்கப்பட்ட நிதியம் ஏதும் இருந்தால் ஆவணங்களை சபைக்கு சமர்ப்பியுங்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆளும் தரப்புக்கு சவால் விடுத்தார். |
|
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) நடைபெற்ற தித்வா புயலின் பின்னர் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தித்வா தாக்கத்தின் பின்னர் இலங்கையை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி செயலகத்தால் நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கே உண்டு. ஆகவே நிதி தொடர்பான நிதியங்கள் பாராளுமன்றத்தின் அனுமதியுடன் தான் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.ஆகவே இந்த நிதியத்தை சட்டத்தால் நியமியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். கடந்த கால முறைகேடுகள் பற்றி பேசப்படுகிறது. எதிர்காலத்தில் அவ்வாறான முறைகேடுகள் இடம்பெறாத வகையில் செயற்படுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். இலங்கையை கட்டியெழுப்பும் நிதியம் ஒன்று ஜனாதிபதி செயலகத்தால் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.ஆனால் அவ்வாறான நிதியம் ஏதும் நியமிக்கப்படவில்லை என்று நான் குறிப்பிட்டுக் கொள்கிறேன். சட்டத்தால் அவ்வாறான நிதியம் ஏதும் நியமிக்கப்பட்டிருந்தால் அதற்கான ஆவணங்களை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பியுங்கள் என்று ஆளும் தரப்பிடம் கேட்டுக்கொள்கிறேன். இந்த நிதியத்துக்கு கிடைக்கும் நிதி தனிநபரின் சட்டைப்பைக்குள் செல்கிறது என்று நாங்கள் குறிப்பிடவில்லை. நாட்டில் கணக்காய்வாளர் நாயகம் தற்போது இல்லை ஆகவே அரச நிதி தொடர்பான குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் இதனை குறிப்பிடுகிறேன் என்றார். |