
வியட்நாமை சூறையாடிய கஜிகி.
வியட்நாமை தாக்கிய கஜிகி (Kajiki) சூறாவளி பலத்த அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. மணிக்கு 130 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய புயலுடன் கடும் மழையும் பெய்ததால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இதுவரை மூவர் உயிரிழந்ததுடன், பலர் மாயமாகியுள்ளனர்.
புயலால் 7,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் 28,800 ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி, 18,000 மரங்கள் சாய்ந்துள்ளன. தன்ஹோ பகுதியில் மட்டும் 331 மின்கம்பங்கள் சரிந்ததால், பல மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
நிலைமை மோசமடைந்ததால், கிட்டத்தட்ட 44,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மீட்புப் பணிகளில் 16,000 ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, இரண்டு உள்நாட்டு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 35 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், வியட்நாமில் இருந்து சர்வதேச விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
வடக்கு வியட்நாமின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களில் கூடுதல் மழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் 150 மில்லிமீட்டர் வரை மழை பதிவாகும் வாய்ப்பு உள்ளதாகவும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம் நிலவுகிறது எனவும் அந்நாட்டு தேசிய காலநிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.