சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட யாஷிகா ஆனந்த்

31.07.2021 15:18:52

சில தினங்களுக்கு முன்பு நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் மாமல்லபுரம் அருகே அதிவேகமாக சென்ற போது நள்ளிரவு 1 மணியளவில் சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் யாஷிகா மற்றும் அவருடன் பயணித்த மூவரில் ஆண் நண்பர்கள் இருவர் படுகாயமடைந்தனர். துரதிருஷ்டவசமாக யாஷிகா ஆனந்தின் தோழி வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் அதிவேகமாக கார் ஓட்டி வந்த யாஷிகா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரது ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விபத்தில் அவருக்கு இடுப்பு மற்றும் முதுகுப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளாராம். விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.