30 ஆண்டுகளுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணைந்த இளையராஜா

03.01.2021 10:32:21

தமிழில் கடந்த 1990-ம் ஆண்டு வெளிவந்த ‘கேளடி கண்மணி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வஸந்த். அதன்பின்னர் ‘நீ பாதி நான் பாதி’, ‘ஆசை’, ‘நேருக்கு நேர்’ போன்ற பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கினார். அடுத்ததாக ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், தற்போது இயக்குனர் வஸந்த், புதிய படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார். அந்த படத்தை அவரே தயாரிக்கவும் உள்ளாராம். இந்த படத்திற்கு இசையமைக்க இளையராஜாவிடம் ஒப்புதல் பெற்றுள்ளதாக வஸந்த் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

இதன்மூலம் ‘கேளடி கண்மணி’ படத்தை அடுத்து சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் இளையராஜாவுடன் இணைந்து வஸந்த் பணிபுரிய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

வஸந்த் மற்றும் இளையராஜா இணைந்த ‘கேளடி கண்மணி’ படத்தில் இடம்பெற்ற ‘மண்ணில் இந்த காதல்’ மிகவும் பிரபலமானது. ஏனெனில் இப்பாடலை எஸ்.பி.பி. மூச்சு விடாமல் பாடி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.