மிகப்பெரிய அகதிகள் முகாம் மீது தாக்குதல்

19.10.2024 09:08:25

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது போருக்கான முடிவுக்கு வழிவகுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்றைய தினம் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று மாலை வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் முகாமில் தஞ்சமடைந்திருந்த 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 21 பேர் பெண்கள் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இடிபாடுகளுக்கிடையில் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 50 வரை உயரும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் இந்த தாக்குதலில் குழந்தைகள் 85 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.

ஜபாலியா முகாமில் உள்ள பல்வேறு தற்காலிக குடியிருப்புகள் மீதும் வான்வழியாக வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. கடந்த ஒரு வருடமாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 42,500 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 99,௦௦௦ பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். காசாவில் மொத்தம் 8 பெரிய அகதி முகாம்கள் உள்ளன. அவற்றுள் மிகப்பெரியது ஜபாலியா அகதிகள் முகாம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.