அமெரிக்கா கண்டனம்
அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சுவார்த்தைக்கு இணங்காமல் அடாவடி போக்கை யைாண்டு வரும் வடகொரியா, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை அச்சுறுத்தும் விதமாக தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் தொடர்ச்சியாக 7 முறை ஏவுகணை சோதனைகளை நடத்தி அதிர வைத்தது.
அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 27-ந்தேதி வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்ததாக ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகள் குற்றம் சாட்டின. ஆனால் அதை மறுத்த வடகொரியா உளவு செயற்கைக்கோளில் பொருத்தப்படவேண்டிய கேமராக்களை சோதனை செய்ததாக தெரிவித்தது.
இந்த நிலையில் வடகொரியா நேற்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாகவும், 560 கி.மீ. உயரத்தில் 270 கி.மீ. தூரம் வரை பறந்த ஏவுகணை பின்னர் கடலில் விழுந்ததாகவும் தென்கொரியா கூட்டுப்படைகளின் தலைவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் செயல்களை தவிர்க்குமாறு வடகொரியாவுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.