புடினை தொலைபேசியில் அழைத்து எச்சரித்த டொனால்டு ட்ரம்ப்!

11.11.2024 07:51:09

டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள நிலையில், முதல் முறையாக ரஷ்ய ஜனாதிபதி புடினுடனான தொலைபேசி அழைப்பில் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தெரிவாகியுள்ள நிலையில், குடியரசுக் கட்சியின் டொனால்டு ட்ரம்ப் உலகின் பல தலைவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு வருகிறார்.

  

அந்த வகையில் வியாழக்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார் டொனால்டு ட்ரம்ப். இந்த நிலையில், உக்ரைன் போர் தொடர்பில் விவாதித்ததை அடுத்து, போரை தீவிரப்படுத்த வேண்டாம் என ட்ரம்ப் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.

அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அமெரிக்க ராணுவம் முகாமிட்டுள்ளதையும் புடினுக்கு நினைவூட்டியதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் பரப்புரையின் போது, பொறுப்புக்கு வந்த ஒரே நாளில் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர தம்மால் முடியும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அதை எவ்வாறு முடிவுக்கு கொண்டுவருவார் என அவர் விளக்கமளிக்கவில்லை. புதன்கிழமை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை ரஷ்ய ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள தகவலில், உக்ரைன் விவகாரத்தை ட்ரம்புடன் விவாதிக்க புடின் தயாராக உள்ளார் என்றும், ஆனால் ரஷ்யாவின் நிபந்தனைகளை கைவிடும் எண்ணம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஜூன் 14ம் திகதி புடின் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டும் என்றால், நேட்டோவில் இணையும் திட்டத்தை உக்ரைன் முற்றாக கைவிட வேண்டும், அத்துடன் ரஷ்யா தற்போது கைப்பற்றியுள்ள நான்கு பிராந்தியங்களில் இருந்தும் உக்ரைன் ராணுவம் வெளியேற வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.

ஆனால் உக்ரைன் இந்த நிபந்தனைகளை நிராகரித்துள்ளதுடன் அது சரணாகதிக்கு சமமாக இருக்கும் என்றும் புறந்தள்ளியுள்ளது.