அணு ஆயுத போரை மேற்கு நாடுகளே பரிசீலிக்கிறது
ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 7வது நாளாக நீடிக்கிறது. உக்ரைனை சுற்றி வளைத்து ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்துவதால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டைப் பாதுகாக்க உக்ரைன் படையினர் கடுமையாக போராடி வருகின்றனர்.
உக்ரைனுக்குள் நுழையும் ரஷிய வீரர்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்துகின்றனர். உக்ரைனுக்குள் நுழைந்த ரஷிய வீரர்களில் இதுவரை 9000 வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. உக்ரைனுக்கு நட்பு நாடுகள் ஆயுத உதவிகள் வழங்கி வருவதால் போர் தீவிரமடைந்துள்ளது.
இதற்கிடையே, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், தனது நாட்டிற்கு எதிராக மேற்கு நாடுகள் நட்பற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குற்றம் சாட்டி, ரஷ்யாவின் அணு ஆயுதப் படைகளை அதிக எச்சரிக்கையுடன் வைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், அணு ஆயுத யுத்தத்தை மேற்கு நாடுகளே பரிசீலிக்கிறது என ரஷிய வெளியுறவுத் துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
மூன்றாவது உலகப் போர் அணு ஆயுத யுத்தமாக தான் இருக்க முடியும். அணு ஆயுத யுத்தம் பற்றிய யோசனை மேற்கத்திய அரசியல்வாதிகளின் தலையில் தொடர்ந்து சுழன்றுக் கொண்டு இருக்கிறது. ரஷியர்களின் தலையில் இல்லை. எனவே, எந்த ஆத்திரமூட்டலும் எங்களை சமநிலையில் இருந்து தூக்கி எறிய அனுமதிக்க மாட்டோம் என்று நான் உறுதியளிக்கிறேன்.