திமுக பிரமுகரை கைது செய்த போலீஸ்!

01.10.2026 14:59:49

உலக பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலமான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சொந்தமாக நிலங்கள் உள்ளது. அந்த வகையில் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை அருகில் சுமார் ரூ.50 கோடி மதிப்பில் கட்டிடத்துடன் கூடிய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் ஸ்ரீரங்கம் பகுதி திமுக செயலாளர் ராம்குமார் என்பவர் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கோயில் நிலத்தை ஆக்கிரமித்தது மட்டுமல்லாமல், அந்த இடத்தில் கட்சி அலுவலகத்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக திருச்சி மாநகர காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் திமுக செயலாளர் ராம்குமார் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ராம்குமாரின் மனைவி திருச்சி மாநகராட்சி வார்டு கவுன்சிலராகப் பதவி வகித்து வருகிறர். மேலும், இவர் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு மிகவும் நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், தனக்கு முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் திமுக பிரமுகர் ராம்குமார் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது அவரை மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த நிலையில், திமுக பிரமுகர் ராம்குமாரை திருச்சி மாவட்ட காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.