“எந்த அரசியல் கட்சியும் மக்களின் நலனுக்காக செயல்படுவதில்லை”

31.10.2022 09:17:29

நாட்டிலுள்ள எந்தவொரு அரசியல் கட்சியும் பொது மக்களின் நலனுக்காக செயற்படுவதில்லை என மிஹிந்தலை ரஜமஹா விஹாராதிபதி வளவஹங்குணவேவே தம்மரதன நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

ஆகவே பொதுமக்கள் வரவிருக்கும் தேர்தல்களில் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க கூடாது என தம்மரதன நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் வீழ்ச்சிக்கு அனைத்து தரப்பினரும் காரணம் என்பதனால் இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கங்கள் மீது தமக்கு நம்பிக்கை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் ஒன்றிணைந்து இலங்கையை “ஏழை நாடு” என்று வர்த்தமானியில் அறிவித்துள்ளதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அபிவிருத்தியடைந்து வரும் நாடாக அறியப்பட்ட போதிலும், 75ஆவது சுதந்திர தின விழாவை “ஏழை நாடாக” நினைவுகூரத் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் மக்களுக்கு சேவை செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை எனவே உள்ளூராட்சி , மாகாண சபை அல்லது பொதுத் தேர்தல்கள் எதுவாக இருந்தாலும், மக்கள் கட்சிகளின் பேரணிகளில் கலந்து கொள்ளவோ வாக்களிக்கவோ வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

மதகுருமார்கள் எந்தவொரு அரசியல்வாதிக்கும் ஆதரவளிக்கக் கூடாது என்றும் மக்கள் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றும் தம்மரதன நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.