எம்.பிக்களின் சிறப்புரிமை மீறப்படுகிறது!

12.07.2025 09:54:52

பாராளுமன்றத்திற்குள் கூறும் விடயங்கள் தொடர்பில் விசாரணைகளுக்காக எம்.பிக்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அழைக்கப்படுவது சிறப்புரிமைகளை மீறும் செயல். அவ்வாறு செயற்பட்டு எம்.பிக்களின் உரிமைகளை இல்லாமல் செய்துவிட வேண்டாமென ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தில் கூறிய விடயங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். எங்களுக்கு குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவுக்கு செல்வது தொடர்பில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. அர்ச்சுனா எம்.பிக்கும் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர் பாராளுமன்றத்திற்குள் கூறிய விடயம் தொடர்பிலேயே விசாரிக்கப்பட்டுள்ளார்.

அவர் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையை முன்வைப்பதற்கும் இடமளிக்கப்படவில்லை. இந்த விடயம் தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்புகின்றனர். எங்களின் உரிமைகளை இல்லாமல் செய்ய வேண்டாம். நீங்கள் சிறப்புரிமை பிரச்சினையை முன்வைக்க இடமளித்த பின்னர் அதனை செய்யலாம்.

நாங்கள் கூறியவை தொடர்பில் 5 மணித்தியாலங்கள் விசாரணைகளை நடத்தினர். நாங்கள் எங்களுக்கு தெரிந்த முக்கிய தகவல்களை வெளியிட்டோம். அதன் பின்னர் கொள்கலன்களை விடுவித்தவர்களை அழைத்து விசாரிக்குமாறும் நாங்கள் கோரினோம் என்றார்.

இதனை தொடர்ந்து ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து எழுந்த அர்ச்சுனா எம்.பி கூறுகையில்,

பாராளுமன்றத்திற்கு வெளியில் கூறிய கருத்து தொடர்பிலேலேயே விசாரணைக்கு அழைக்கப்படுவதாக கூறப்பட்டது. நான் எங்கே வெளியில் அவ்வாறு கதைத்தேன்?. பாராளுமன்றம் எங்கே போகின்றது. குற்றப்புலனாய்வு பிரிவில் எனது பாராளுமன்ற உரை தொடர்பிலேயே வாக்குமூலத்தை பெற்றார்கள். இது நகைச்சுவையானது என்றார்.