பாராளுமன்ற நடவடிக்கைகளில் மாற்றம்.
பாராளுமன்றத்தில் நாளை 22 மற்றும் 23ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த நடவடிக்கைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பொதுச்செயலாளர் குஷானி ரோகனதீரா தெரிவித்துள்ளார்.
பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலி தலைமையில் இன்று (21) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை (22) விவாதிக்கப்படவிருந்த ஏற்றுமதி விவசாயத்தை ஊக்குவித்தல் (திருத்த) சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நாளை மறுதினத்திற்கு (23) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 23ஆம் திகதி விவாதிக்க திட்டமிடப்பட்டிருந்த இலங்கை பட்டய ஊடக வல்லுநர்கள் நிறுவனம் தொடர்பான சட்டமூலம் முன்வைக்கப்படாது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களுக்கு மின்சாரக் கட்டண நிவாரணம் வழங்குவதற்காக 17,213 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டுக்கான துணை மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், அதற்கு 23ஆம் திகதி ஒப்புதல் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகளுக்காக ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.