விடுதலைப் புலிகள் தொடர்பில் பேசிய விக்கி! பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை

24.03.2021 09:37:37

வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஸ்வரனுக்கு எதிராக, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

விக்னேஸ்வரன் தொடர்பிலான விசாரணைகள் குறித்த அறிக்கையொன்றும் ஓகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில், இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில், சி.வி விக்னேஸ்வரன் கருத்துக்களை வெளியிட்டதாக கூறி, அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய, தாம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால், கொழும்பு பிரதான நீதவான் புத்தின ஶ்ரீ ராகலவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கை ஆகியவற்றின் கீழ், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் என்பது பயங்கரவாத அமைப்பு கிடையாது எனவும், இராணுவத்தினரால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கல் பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சி.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளதாக முறைப்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், வட மாகாணத்தில் புத்தர் சிலைகளை அமைத்து, தமிழ் மக்களை அடக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், சி.வி விக்னேஸ்வரன் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கூறியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, இது தொடர்பான விசாரணைகளை தாம் முன்னெடுத்துள்ளதாக, கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

இதேவேளை இந்த விசாரணை தொடர்பான முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதிமனத்தினால், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.