இ.பி.எஸ்-யின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பதிலடி!

09.09.2024 07:56:02

ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் மாணவர்களை பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கும் அரசுக்குக் கண்டனம் எனும் தலைப்பில், தமிழ்நாடு முழுவதும் சிறப்புக் குழு அமைத்து, ஆதிதிராவிட மாணவ, மாணவிகளின் விடுதிகளைப் போர்க்கால அடிப்படையில் உணவு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளைச் சீர் செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியால் நேற்று (08.09.2024) வெளியிடப்பட்ட அறிக்கைக்கு தமிழக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் புள்ளிவிவரத்துடன் மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளார்.

   

அதில், “பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள் மீது வன்கொடுமை குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க மாநில அளவில் ஐ.ஜி. தலைமையிலும் மாவட்டங்களில் டிஎஸ்பி தலைமையிலும், சமூக நீதி மற்றும் கண்காணிப்புக் பிரிவு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் 1331 விடுதிகளில் 98,909 மாணாக்கர்கள் தங்கி கல்வி பயின்று வருகிறார்கள். இவர்களின் நலன் காக்க இவ்வரசு பல்வேறு விரிவான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

விடுதிகளில் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த காலங்களில் ஆண்டுதோறும் ரூபாய் 6 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்த நிலையில், இவ்வரசு பொறுப்பேற்றவுடன் 2021-2022 ஆம் ஆண்டு திருத்திய வரவு செலவு திட்டத்தில் சிறப்பு பராமரிப்பு பணிக்காக கூடுதல் நிதி ரூ25.00 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழக்கமான நிதி ரூ1.0 கோடியும் சேர்த்து ரூ.35 கோடி மதிப்பீட்டில் 366 விடுதிகளில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விடுதிகளுக்கு சென்று பார்த்தாலே கடந்த பத்து ஆண்டுகளில் முந்தைய ஆட்சியைப் போல் அல்லாமல் மிகச்சிறப்பாக பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வந்திருப்பதை கண்கூட அறிய முடியும்.

இதன் தொடர்ச்சியாக இத்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக நடப்பு 2024-2025 ஆம் ஆண்டில் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் தேவைப்படும் அனைத்து விடுதிகளுக்கும் சிறப்பு பராமரிப்பு பணிகளுக்காக ரூ.100 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு, 520 ஆதிதிராவிட நல விடுதிகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தாட்கோ மூலம் துவங்கப்பட உள்ளன. இதில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மயிலாப்பூர் மாணவர் விடுதிக்கு ரூ.19 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவை தவிர மாணாக்கர்களுக்கு தனியார் விடுதிகளுக்கு இணையாக அனைத்து வசதிகளுடன் கூடிய முன்மாதிரி விடுதிகள் கட்டப்படும் என்ற அறிவிப்பின் கீழ் ரூ.44.50 கோடியில் சென்னை சைதாப்பேட்டை எம்.சி. ராஜா கல்லூரி மாணவர் விடுதி, ரூ.100 கோடி மதிப்பீட்டில் மதுரை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் நீலகிரி போன்ற பெரு நகரங்களில் நவீன முன்மாதிரி விடுதிகள் அறிவிக்கப்பட்டு கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் அனைத்து கல்லூரி மாணவர் விடுதியிலும் தங்கி பயிலும் மாணாக்கர்களின் கற்றல் திறனை மேம்படுத்துதல் மற்றும் அவர்களின் தனித்திறனை வளர்க்கும் விதமாக 'Digital Signage Board’ வழங்கப்பட்டு இணைய வழிக் கல்வியும் இணையவழியில் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்திற்கும் மேலாக இவ்வரசு பொறுப்பேற்றவுடன் விடுதி மாணாக்கர்களுக்கு வழங்கும் மாதாந்திர உணவு கட்டணம் பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 லிருந்து ரூ.1400 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1100-லிருந்து ரூ.1500 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மாணாக்கர்களுக்கான மாதாந்திர பல்வகை செலவின தொகை பள்ளி மாணவர்களுக்கு ரூ.50-லிருந்து. ரூ.100 ரூபாயாகவும் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.75 லிருந்து ரூ.150 என இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டு மாணாக்கர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

சென்னை நகரை பொறுத்தவரை மொத்தமுள்ள 19 விடுதிகளுக்கு இரண்டு ஒருங்கிணைந்த சமையலறை மூலம் தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மயிலாப்பூர் கல்லூரி மாணவர் விடுதிக்கு தினந்தோறும் சைதாப்பேட்டை எம்.சி ராஜா மாணவர் விடுதியில் இருந்து மாணாக்கர் எண்ணிக்கைக்கேற்ப சரியான அளவில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் உணவானது சரியான அளவு மற்றும் தரத்தில் உள்ளதா என்பதனை கண்காணிக்க தனியாக ஒரு செயலி ஏற்படுத்தப்பட்டு தினந்தோறும் அச்செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இது சரிதான என்பதனை அவ்விடுதியில் தங்கியுள்ள மாணாக்கர்களே சரிபார்க்க முடியும் மாணாக்கர்களின் எண்ணிக்கை சரியாக உள்ளதா என்பதனை கண்காணிக்க 1331 விடுதிகளிலும் ரூ.27 கோடி மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமரா மற்றும் பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தும் பணியானது நடைபெற்று வருகிறது.

மேலும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியானது திருப்பி அனுப்பப்படுகிறது என்பது தவறான செய்தியாகும். 2023-2024 ஆம் நிதியாண்டில் இதுவரை 97.6% செலவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கையானது அடிப்படை ஆதாரங்கள் இல்லாததாகவும் திசை திருப்பும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வரசு பொறுப்பேற்ற பின் ஆதிதிராவிட நல மாணவர் விடுதிகள் மற்றும் பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் அனைத்து மாணாக்கர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் பன்முகத்திறனை வெளிக்கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை சீரிய முறையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு எடுத்து வருகிறது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.