இராணுவ ஆட்சிக்கெதிராக மியன்மாரில் போராட்டம்
மியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்து பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் இராணுவத்தினர் பொது மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (திங்கட்கிழமை) நடந்த இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில், மிட்கினியாவில் போராட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதால் பதிலுக்கு இராணுவத்தினர் மீது பொதுமக்கள் கற்களை வீசி எறிவதும், அப்போது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது.
சிறிது நேரத்தில் போராட்டக்காரர்கள் காயமடைந்த பலரைக் கொண்டு செல்கின்றனர். அதில் இருவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது காணொளியில் பதிவாகியுள்ளது.
இதேபோல், தலைநகர் நேபிடாவிலும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி இராணுவத்தினர் விரட்டியடித்தனர்.
இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேவின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது. அங்கும் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தும் என அஞ்சி போராட்டக்காரர்கள் தாங்களாகவே கலைந்து சென்றனர்.
ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியதில் இருந்து குறைந்தது 50பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.