ஜேர்மனிக்கு விரையும் ஜோ பைடன்!

14.10.2024 07:46:46

கடந்த வாரம் மில்டன் சூறாவளி காரணமாக ரத்து செய்யப்பட்ட பயணம், இந்த வாரம் முன்னெடுக்கப்படும் என ஜோ பைடன் தொடர்பில் ஜேர்மன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜேர்மனியின் மூத்த அதிகாரி ஒருவர் இது தொடர்பில் உறுதி செய்துள்ளார். ஆனால் மேலதிக தகவல் எதையும் வெளிப்படுத்த அவர் மறுத்துள்ளார். இந்த நிலையில், உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில்

   

சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸையும், ஜனாதிபதி ஃப்ராங்க் வால்ட்டர் ஸ்டெய்ன்மெயரையும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சந்திக்க இருக்கிறார் என்றே குறிப்பிட்டுள்ளது.

இந்த சந்திப்பானது வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படலாம் என்றும், உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் இறுக்கும் போர் நெருக்கடி தொடர்பில் விவாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ஆகியோரும் ஜோ பைடன் உடனான சந்திப்பில் கலந்துகொள்ள இருப்பதாகவும், இவர்களுடன் மேலும் 20 தலைவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் ஜேர்மனி தெரிவித்திருந்தது.

ஆனால், தற்போது அப்படியான ஒரு சந்திப்புக்கு வாய்ப்பு குறைவு என்றே ஜேர்மன் தரப்பில் கூறப்படுகிறது. ஜனாதிபதியாக பொறுப்புக்கு வந்த பின்னர் ஜோ பைடன் மேற்கொள்ளும் முதல் ஜேர்மன் விஜயம் இதுவென கூறப்படுகிறது.

ஆனால் 2022 ஜூன் மாதம் பவேரியா பகுதியில் முன்னெடுக்கப்பட்ட G7 உச்சி மாநாட்டில் ஜோ பைடன் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.