மாயன் நாகரிக வரலாறு: பழமையான மாயன் காலத்து படகு கண்டுபிடிப்பு

03.11.2021 16:22:35

தெற்கு மெக்சிகோவில் அகழ்வாய்வாளர்கள் ஒரு பழங்கால மரத்தினாலான சிறு படகை கண்டுபிடித்துள்ளனர். அப்படகு 1,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.


ஐந்து அடிக்கும் அதிக நீளமுள்ள அச்சிறு படகு, கிட்டத்தட்ட எந்தவிதத்திலும் பழுதுபடாமல் அப்படியே கண்டுபிடிக்கப்பட்டது. அப்படகு சிச்சன் இட்ஸா என்கிற அழிந்து போன மாயன் நாகரிக நகரத்துக்கு அருகில், ஒரு நன்னீர் குளத்தில் மூழ்கிக் கிடந்தது.

அந்த சிறிய படகு, தண்ணீரை வெளியில் எடுப்பதற்கோ, சடங்கு தொடர்பான பொருட்களை பத்திரப்படுத்தி வைப்பதற்கோ பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என மெக்சிகோவின் பழங்கால பொருட்கள் நிறுவனம் (இனாஹ்) கூறுகிறது.

மாயா இரயில் என்கிற புதிய சுற்றுலா ரயில்தடம் தொடர்பான கட்டுமானப் பணிகளைத் தொடங்கிய போது இந்த அரிய கண்டுபிடிப்பு வெளிப்பட்டுள்ளது.