பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அவசியமா?

25.09.2026 08:42:20

காமராஜர், அண்ணா எல்லாரும் இந்த சட்டமன்றத்தில் இருந்தாங்க.. யாரும் எடுக்க சொல்லவில்லை. ஆனால் நீ வந்து மூன்று மாதம் கூட ஆகல.. அதற்குள் உன் கட்டிடத்திற்கு எதிரே பீச் ஓரமாக தலைமை செயலகம் அமைத்து காற்று வாங்க வேண்டும் என நினைத்தால் சும்மா விட்டுருவோமா நாங்க.. எங்க வாழ்வாதாரம் என்ன ஆகும்? என பட்டினப்பாக்கம் மக்கள் புதிய தலைமை செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீ இங்க வருவ.. பிறகு உன் பிளாட்டில் வந்து உட்காந்துகொண்டு நாறுது என்று சொல்வ.. அப்புறம் வந்து எங்களை எல்லாம் காலி பண்ண சொன்னால் நாங்க எங்கே போவோம்.. சினிமாவில் காட்டுகிற டயலாக் எல்லாம் வேண்டாம்.. எங்க இடம் எங்களுக்கு தான்.. பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு பக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்க விஜய் விரும்புகிறார்.

மாற்றம் வரும் என்று தான் எல்லாரும் ஓட்டும் போட்டோம், ஆனால் இவர் இப்போது செய்வதை எல்லாம் பார்க்கும் போது பயமாக இருக்கிறது.. இது அரசு இடம் என ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பலரும் சொல்கிறார்கள். ஆனால் இது மீனவர்கள் இடம்.. மீனவர்கள் வாழ்ந்ததற்கான இடம் என்ற ரெக்கார்டு எங்களிடம் இருக்கு.. கிட்டத்தட்ட அந்த காலத்திலேயே 230 பேர் வாழ்ந்ததற்கான ரெக்கார்டு இருக்கு என்றும் அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏன் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் வேண்டாம்? என்ன காரணம் சொல்கிறார்கள்? என்பதை அறிய, "ஒன்இந்தியா தமிழ்" நேரடியாக களத்திற்கே சென்று அங்குள்ள மக்களிடம் கருத்துக்களை கேட்டபோது இவ்வாறு பலரும் தங்கள் வேதனைகளை தெரிவித்துள்ளனர்.

புதிய தலைமை செயலகம் தமிழக முதல்வர் விஜய், சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ், ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கப்படும் என அறிவித்தார். எங்களிடம் கருத்து கேட்காமலேயே முதல்வர் விஜய் எப்படி அறிவிப்பு வெளியிட்டார்? என பட்டினப்பாக்கத்தை சுற்றியுள்ள 9 கிராம மீனவ மக்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இங்கு புதிய தலைமை செயலகம் அமைக்க கூடாது எனவும் விஜய் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ள கம்யூனிஸ்ட்களும் புதிய தலைமை செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.