ஆப்பிரிக்காவில் நிலவும் கடும் பஞ்சம்!
தென் ஆப்பிரிக்க நாடுகளில் உணவு பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் நமீபியாவை தொடர்ந்து ஜிம்பாப்வேயிலும் காட்டு விலங்குகளை கொன்று உணவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தின் தென் பகுதியில் உள்ள நாடுகளில் கடந்த சில மாதங்களில் வறட்சி, பஞ்சம் எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளது. மக்கள் பலரும் தினசரி ஒருவேளை உணவு கிடைப்பதற்கே அல்லாடும் நிலை உண்டாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் ஆப்பிரிக்க காடுகளின் அடையாளமாக விளங்கும் ஆப்பிரிக்க காட்டு யானைகள், ஒட்டகசிவிங்கி, மான்கள், வரிக்குதிரைகள் போன்றவற்றை கொன்று உணவாக்கி மக்களுக்கு வழங்க தென்னாப்பிரிக்க நாடுகள் திட்டமிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜாம்பியா, நமீபியா நாடுகளில் ஏற்கனவே அந்நாட்டிற்குட்பட்ட காட்டு பகுதியில் உள்ள விலங்குகள் வேட்டையாடப்பட்டு உணவாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அண்டை நாடான ஜிம்பாப்வேயிலும் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் ஆப்பிரிக்க யானை வகைகளை கொன்று உணவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 50 யானைகளை கொன்ற ஜிம்பாப்வே அரசு, தற்போது 200 காட்டு யானைகளை கொன்று உணவாக்க திட்டமிட்டுள்ளது.