அனுராதபுரத்தில் இந்துக் கோயில்களை அமைக்கும் திட்டமா?
|
அநுராதபுரம் புனித நகர திட்டத்தில் இந்து கோயில்களை அமைக்கும் முன்மொழிவு உள்வாங்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் முற்றிலும் போலியானது. குறுகிய அரசியல் இலாபத்துக்காக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அநுராதபுரத்தின் புனித தன்மையை பாதுகாப்பதற்காகவே அபிவிருத்தி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார். |
|
அநுராதபுரம் புனித நகர அபிவிருத்தி திட்டத்தில் சிவன் மற்றும் இராமர் கோயிலை அமைப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். உதய கம்மன்பில புனித அநுராதபுரம் நகர திட்டம் தொடர்பில் போலியான விடயங்களை குறிப்பிட்டு மத முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டி சிவில் செயற்பாட்டாளரான உபாலி ரத்நாயக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளார். இவ்வாறான பின்னணியில் அநுராதபுரம் புனித நகர அபிவிருத்தி குறித்து தனியார் ஊடகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சர் சுனில் செனவி மேலும் குறிப்பிட்டதாவது, அநுராதபுரம் புனித நகர அபிவிருத்தி திட்டத்தால் அநுராதபுர நகரின் புனித தன்மைக்கும், தொல்லியல் மரபுரிமைகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. புனித அநுராதபுரம் அபிவிருத்தி திட்டம் எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் உருவாக்கப்பட்டதல்ல, 1981 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இந்த திட்டம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் புனித அபிவிருத்தி திட்டத்தில் இந்து கோயில்களை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாக ஒருசில அரசியல்வாதிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது.குறுகிய அரசியல் நோக்கத்துக்காக இவர்கள் ஏன் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகாலமாக எதிர்க்கட்சியினர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் வெறும் குற்றச்சாட்டுக்களாகவே அமைந்துள்ளது. இதுவும் அவ்வாறானதே, பௌத்த மதத்துக்கு எதிராக ஒருபோதும் செயற்படவில்லை. பௌத்த மதத்தின் உரிமைகளை பாதுகாத்துக் கொண்டு ஏனைய மதங்களில் உரிமைகளும் பாதுகாக்கப்படுகின்றன. எந்த மதத்துக்கும் எதிராக செயற்படவில்லை. மத நல்லிணக்கத்தின் ஊடாகவே தேசிய நல்லிணக்கத்தை வெற்றிக்கொள்ள முடியும் என்றார். |