உதயநிதியின் சொத்து விபர வழக்கு .
|
தமிழக துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவரது சொத்து விவரங்களைக் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து அத்தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் குமரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். |
|
அந்த மனுவில், “கடந்த 2021ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவரது திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மூலம் 7 கோடியே 36 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பதாக உதயநிதி குறிப்பிட்டிருந்தார். ஆனால் தற்போது தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் அது தொடர்பான விவரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை. அவரது மனைவி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் 2 கோடியே 63 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனை குறித்து முறையான விளக்கங்கள் எதுவும் வேட்புமனுவில் குறிப்பிடப்படவில்லை கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் 11 கோடியே 6 லட்ச ரூபாய் தனியார் வீட்டு வசதி நிறுவனத்திற்குக் கடன் கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்த உதயநிதி ஸ்டாலின் 2021ஆம் ஆண்டு வேட்பு ஆண்டு தேர்தல் வேட்பு மனுவில் 10 கோடி என்று குறிப்பிட்டுள்ளார். மீதமுள்ள ஒரு கோடி ஆறு லட்ச ரூபாய் பணம் திருப்பி செலுத்தப்படப்பட்டதா? என்ற விவரங்களைத் தெரிவிக்கவில்லை. இதன் மூலம் 2020 ஆம் ஆண்டிற்கு 2 கோடி ரூபாய் வருமானம் குறிப்பிட்ட உதயநிதி தற்போது 10 கோடியே 98 லட்சம் வருமானம் உள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறார். எனவே வருமானம் மற்றும் சொத்து அதிகரித்தது குறித்துக் கூறும் விளக்கங்கள் விரிவாகவும், தெளிவாகவும் இல்லை. எனவே சொத்து குறித்து தவறான, முறையற்ற தகவல்களை வேட்பாளர் தெரிவிப்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் விரோதமானது. எனவே இது குறித்து வருமான வரித்துறைக்கும், கார்ப்பரேட் விவகாரத்துறைக்கும் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (15.04.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் தரப்பில், “வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்ததால் மக்கள் பிறநிதித்துவ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நடைமுறை தொடங்கிவிட்டதால் இந்த விவகாரத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வரும் 20ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு வருமான வரித்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கை ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். |