கேரளா, டெல்லியை தொடர்ந்து தெலுங்கானாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு

25.07.2022 11:19:14

குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவில் தற்போது குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. கேரளாவில் 3 பேர் குரங்கு அம்மைநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இமாச்சல் பிரதேசம், மணாலிலிருந்து டெல்லிக்கு உறவினர் திருமணத்திற்கு வந்த 34 வயது வாலிபருக்கு குரங்கமை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவரது ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதில் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெயபிரகாஷ் ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் காமெட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு சொறி ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் அவரை காமெட்டி அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தனர்.

இதையடுத்து ஐதராபாத் அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் மாற்றப்பட்டார். வாலிபரின் ரத்த மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவுகள் இன்று வந்தது. இதில் அவருக்கு குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.