மருத்துவமனைமீது ரஷ்யா தாக்குதல்

11.03.2022 16:28:36

உக்ரைனில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு இரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது. இச்செயலுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை உக்ரைனின் தென்கிழக்கு பிராந்தியமான Mariupol நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரஷ்ய படைகள் மேற்கொண்ட இந்த தாக்குதலில் ஒரு சிறுமி உட்பட மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். இரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு மக்ரோன் கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளார்.

“மருத்துவமனை மீது தாக்குதல் நடத்துவது - தகுதியற்ற மற்றும் ஒழுக்கக்கேடான போர் நடவடிக்கை” என மக்ரோன் தெரிவித்துள்ளார்.

“இந்த புகைப்படங்கள் எல்லோரையும் பாதித்தது போல் என்னையும் பாதித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பின் வெளிப்படையான நோக்கம் பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கொல்வது ஆகும். இந்த யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து இரஷ்ய துருப்புக்கள் பலமுறை இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர்!” என மக்ரோன் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை, ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட மக்ரோன், அதன்போதே இதனை தெரிவித்தார்.