பம்பலப்பிட்டி துப்பாக்கிச் சூடு - மதுவரித் திணைக்களம் விளக்கம்!

08.08.2023 09:56:05

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விரைவான அறிக்கை ஒன்றை வழங்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர்  ரஞ்சித் சியம்பலாபிட்டிய மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் டுவிட்டரில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,  பணி நேரத்தின் போது குறித்த சம்பவம் இடம்பெற்றதாக இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேலதிக மதுவரி ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்தார்.

மதுவரித் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று நேற்று (07) பிற்பகல் பம்பலப்பிட்டிக்கு சென்றிருந்ததாகவும், அங்கு போலி கொள்வனவாளரை பயன்படுத்தி ஹெரோயின் கொள்வனவு செய்யப்பட்டதாகவும்  தெரிவித்தார்.

இதன்போது, போதைப்பொருள் வியாபாரியின் உதவியாளரை கைது செய்யச் சென்ற போது, அவர் தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கபில குமாரசிங்க தெரிவித்தார்.

அப்போது, மதுவரித் திணைக்கள அதிகாரிகளை பொலிஸார் கைது செய்த நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும்  குமாரசிங்க கூறினார்.

இது தொடர்பில் நீதிமன்றில் இருந்து சாதகமான முடிவை எதிர்பார்ப்பதாக தெரிவித்த கபில குமாரசிங்க, மதுவரி அதிகாரிகள் தரப்பில் ஏதேனும் தவறிழைக்கப்பட்டிருந்தால் பேசி தீர்த்துக்கொண்டிருக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

இச்சம்பவத்தினால் தப்பியோடிய குற்றவாளியை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பொலிஸ் திணைக்களத்திற்கும் மதுவரித் திணைக்களத்திற்கும் இடையில் நல்லிணக்கம் இல்லாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், துப்பாக்கிகளை பயன்படுத்த மதுவரி அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்து மதுவரித் திணைக்களத்தினால் விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.