பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா?
|
பெரம்பூர் தொகுதியில் விஜய் களமிறங்க இருப்பதாக தவெக வட்டாரத்தில் பலமாக பேச்சு அடிபடுகிறது. சென்னையில் உள்ள தொகுதி என்பதால் அதிமுகவும், திமுகவும் வலுவான வேட்பாளரை இறக்கி விஜய்க்கு கடும் போட்டி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக சத்தமின்றி கூட்டணி கட்சிக்கு இந்த தொகுதியை தாரைவார்த்துள்ளது. அதிமுகவின் இந்த முடிவு விஜய்க்கு சாதமாக ஒன்றாக அமையும் என்று கருதப்படுகிறது. |
|
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பில் மும்முரம் காட்டி வருகின்றன. வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கும் விஜய்யின் தவெக, நாளை மறுநாள் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. தவெக தலைவர் விஜய், சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் அதிகம் பேசப்படுகிறது. தவெகவின் நடவடிக்கைகளும் இதை உறுதிப்படுத்துவது போலவே உள்ளன. விஜய்யும் தனது தேர்தல் பிரசாரத்தை பெரம்பூரில் இருந்தே தொடங்க உள்ளார். இதனால் தவெகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். விஜய் களமிறங்கும் தொகுதி என்பதால் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக பெரம்பூர் மாற உள்ளது. இந்த தொகுதியில் விஜய்யை எப்படியாவது தோற்கடித்து அவருக்கு பாடம் புகட்ட ஆளும் திமுக வியூகம் வகுத்து வருகிறது. இதற்காக பெரம்பூரில் வலுவான வேட்பாளர் நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, விஜய்யை எதிர்த்து அதிமுகவும் வலுவான வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவிற்கு பெரம்பூர் தொகுதியை எடப்பாடி பழனிசாமி ஒதுக்கியுள்ளார். பெரம்பூர் தொகுதியை பொறுத்தவரை 58 சதவீத தலித் மக்கள் வசித்து வருகிறார்கள். அடித்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதியாகவும் பெரம்பூர் தொகுதி இருந்து வருகிறது. சென்னையில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாகவும் பெரம்பூர் உள்ளது. பெரம்பூர் தொகுதியில் 2,22,792 வக்காளர்கள் உள்ளனர். இதில் தவெகவிற்கு கணிசமான செல்வாக்கு உள்ளதாக அவர்களின் சர்வே கூறியதால், இதையெல்லாம் கணக்கில் வைத்தே விஜய் இங்கு களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது. களம் இப்படி இருக்கையில் தலித் ஓட்டுக்களே இல்லாத பாமக இங்கு களம் இறங்கினால் எப்படி வெற்றி பெற முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக, பாஜக போட்டியிடவில்லை. விஜய்யை எதிர்த்து என்.டி.ஏ சண்டை செய்யும் என்று பார்த்தால் விட்டுக்கொடுக்கும் விதமாகவே இந்த முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. பாமக களமிறங்குவதால், விஜய்க்கு இருந்த ஒரு பாதி தலைவலி நீங்கியதாகவே தெரிகிறது. பாமக களமிறங்குவதால், பெரம்பூரில் விஜய் vs திமுக கூட்டணி இடையே தான் போட்டி என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. திமுக சார்பில் கடந்த முறை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட ஆர்.டி சேகர் அபார வெற்றி பெற்றார். அதாவது அதிமுக வேட்பாளர் என்.ஆர் தனபாலனை விட 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி பெற்றார். அதற்கு முன்பு நடந்த 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றிவேல் வெற்றி பெற்று இருந்தார். இதனை தொடர்ந்து நடந்த 2019 சட்டசபை இடைத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார். இதன் காரணமாகவும் வெற்றி பெற முடியாது என்ற காரணத்தினால் அந்த தொகுதியை பாமகவுக்கு அதிமுக ஒதுக்கியதாகவும் ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள். பெரம்பூர் தொகுதி வாக்காளர்கள் எண்ணிக்கை 2,22,792 ஆக உள்ளது. சுமார் 30 ஆயிரம் கிறிஸ்தவ வாக்காளர்களும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களும் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. |