தமிழர் பகுதியில் சீனாவின் காய் நகர்த்தல்!

26.12.2021 10:00:32

இலங்கையின் வடக்கு பகுதியில் மூன்று தீவுகளில் சீனா நிர்மாணிக்கப்படவிருந்த மூன்று கலப்பு மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கும் திட்டத்தை , மாலைதீவுக்கு மாற்ற தீர்மானித்துள்ளதாக தென் இலங்கை பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

காற்று, சூரிய சக்தி ஆகியவற்றை கொண்ட கலப்பு மின் உற்பத்தி நிலையங்களை சீனா நிர்மாணிக்கவிருந்த தீவுகள் இந்தியாவின் தென் பகுதிக்கு மிக அருகில் இருப்பதால், இந்திய அரசு இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில்,இலங்கைக்கான சீனத் தூதுவர் குஷி யென் ஹோங்சோவின் (Kushi Yen Hongzhou) வடபகுதி விஜயத்தின் பின்னர், இந்தியாவின் றோ புலனாய்வு சேவை, (Research and Analysis Wing) வடக்கில் உள்ள உளவு அணியை அதிகரித்துள்ளது.

சீன மக்கள் இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், சீனத் தூதுவருடன் வடபகுதிக்கு விஜயம் செய்தமை தொடர்பாகவும் இந்திய புலனாய்வு சேவை தனது கண்காணிப்புக்கு உட்படுத்தியுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் இருந்து 20 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள சாவக்கச்சேரியில் சீனா கமியூனிகேஷன் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளமை குறித்து றோ கூடிய கவனத்தை செலுத்தியுள்ளது.

இலங்கையில் இந்திய றோ புலனாய்வுப் பிரிவினர் நீண்டகாலமாக செயற்பட்டு வந்த போதிலும் அவர்கள் இலங்கையில் செயற்படுகின்றனர் என்ற உத்தியோபூர்வ தகவல் ஈஸ்டர் ஞாயிறு தீவிரவாத தாக்குதலுடன் தெரியவந்தது என அந்த தென் இலங்கை பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.