இந்தியாவில் பயிற்சி பெற்ற ஆப்கன் வீரர் ஆதங்கம்
ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தாலிபான் பயங்கரவாத அமைப்பு தனது சர்வாதிகாரத்தை தொடங்கியுள்ளது. மாணவர் அமைப்பாக துவங்கிய தாலிபான் பின்னாட்களில் பிற்போக்கு கொள்கைகளின் அமைப்பாக மாறி ஆயுதங்களை கையில் எடுத்து சர்வதேச பயங்கரவாத அமைப்பாக உருவெடுத்தது.
பல நாடுகள் மற்றும் தொழிலதிபர்களின் நிதி உதவி மூலமாக வளர்ந்த இந்த அமைப்பு, அமெரிக்கா பொம்மை அதிபரை பதவியில் அமர்த்தி, ஆப்கானிஸ்தானை தனது கைப்பாவையாக செயல்பட வைப்பதாக குற்றஞ்சாட்டி கடந்த 20 ஆண்டுகளாக வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டது.
இந்நிலையில் இந்தியாவின் உத்ராகண்ட் மாநிலத்தின் முக்கிய நகரான டேராடூன் பகுதியில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் பயின்ற ஓர் பெயர் வெளியிட விரும்பாத மூத்த ஆப்கன் ராணுவ அதிகாரி தாலிபான்களுக்கு அஞ்சி காபூல் நகரத்தில் பதுங்கி உள்ளார். இவர் சமீபத்தில் அளித்த தகவல் வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தான் ராணுவ பலத்தைக் காட்டிலும், தாலிபான்கள் ஆயுத பலம் மிக்கவர்கள் அல்ல என்று தெரிவித்துள்ளார். பல ஆப்கன் ராணுவ வீரர்கள் போரில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர் என்று வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார். தங்கள் நாட்டு தலைவர்கள், தாலிபான்களிடம் விட்டுக்கொடுத்து சென்றதால் தங்களது தியாகம் வீணாகிவிட்டது என்றும், ஆப்கன் ராணுவ வீரர்கள் கோழை அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக தாலிபான் படையினர் மேற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் உள்ள ராணுவ தளவாடமொன்றை தாக்கினர். ராணுவம் இதற்கு தக்க பதிலடி கொடுக்க நினைத்தது. ஆனால் ஆப்கானிஸ்தான் தலைவர்கள் அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டதால் ராணுவத்தால் திருப்பித் தாக்க முடியவில்லை. இவ்வாறாக ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் கைகளை தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகள் கட்டிப்போட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தாலிபான்கள் உடன் தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்று தலைவர்கள் பொய் நம்பிக்கை அளித்ததால், ராணுவம் தாக்குதல் நடத்தாமல் அமைதி காத்தது என்றும், தற்போது தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், பல ராணுவ வீரர்கள் தங்களது உயிரைக் காத்துக்கொள்ள மறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார். நாட்டின் தலைவர்கள் தங்கள் சுயநலத்துக்காக ஆப்கானிஸ்தானை அடகு வைத்து விட்டதாக அவர் கூறியுள்ளார்.