பேரணிகளுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தம்!

30.04.2025 14:10:45

சர்வதேச தொழிலாளர் தினம் அல்லது மே தினம் வியாழக்கிழமை (1) முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தமது பலத்தினை மக்களுக்கு காண்பிக்கும் வகையில் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் பிரதான அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மே தின கூட்டங்களை நடத்தவுள்ளன. இதனால் வியாழக்கிழமை (1) கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மாற்று போக்குவரத்து நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படவுள்ளன.

இதற்கமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் மே தின கூட்டம் வியாழக்கிழமை (1) மாலை 03.30 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் 'கிராமத்தை வெல்லும் போராட்டத்தின் தொழிலாளர்களின் பலம்' எனும் தொனிப்பொருளின் கீழ் வியாழக்கிழமை (1) பிற்பகல் 2 மணியளவில் தலவாக்கலை நகரில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினமான மனோ கணேசன், இலங்கை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினம் கூட்டம் கொட்டகலை, அக்கரபத்தனை மற்றும் பொகவந்தலாவ ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளன. இம்முறை பிரதேசவாரியான கூட்டங்களை மாத்திரமே நடத்த அக்கட்சி ஏற்பாடு செய்துள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மே தின கூட்டம் அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் வியாழக்கிழமை (01) மாலை 2 மணியளவில் நுகேகொட ஆனந்த சமரகோன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியுடன் ஒன்றிணைந்த தரப்பினர்களில் ஒருசிலர் பொதுஜன பெரமுனவின் மே தின கூட்டத்தில் கலந்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை மே தினத்தை முன்னிட்டு பிரதான கூட்டத்தை நடத்தவில்லை. தொகுதிவாரியான கூட்டங்களை மாத்திரம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மே தின கூட்டம் அக்கட்சியின் தலைமை காரியாலயத்தில் நடைபெறவுள்ளது. கட்சியின் ஆதரவாளர்கள் மாத்திரம் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

முன்னிலை சோசலிசக் கட்சி சர்வதேச நாணய நிதிய செயற்திட்டம் மற்றும் இந்தியாவுடனான ஒப்பந்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இம்முறை மே தின கூட்டத்தை நடத்தவுள்ளது.

வியாழக்கிழமை (1) தினம் 12 மணியளவில் கொழும்பு நகரமண்டப வீதியில் இருந்து கிருலப்பனை லலித் அத்துலத்முதலி மைதானம் வரை பேரணியாக சென்று மாலை 3 மணியளவில் பிரதான கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் பங்குப்பற்றலுடனான ஒன்றிணைந்த மே தின கூட்டம் அத்துருகிரிய ஜனோதான அரங்கில் பிற்பகல் 02.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தலைமையிலான சர்வஜன சக்தி மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி இம்முறை மே தினத்தை முன்னிட்டு பிரதான கூட்டங்களை நடாத்தவில்லை.

சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் இம்முறை கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் சிறு அளவிலான கூட்டங்களை நடத்தவுள்ளதுடன், துண்டு பிரசுரம் விநியோக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளன.