இதுதான் உண்மையான மாற்றம்.

11.06.2026 08:37:36

தமிழக அரசியல் வரலாற்றில் மக்கள் பிரதிநிதிகள் தங்களின் பிள்ளைகளை ஆடம்பரமான தனியார் பள்ளிகளில் சேர்ப்பதே வழக்கமாக இருந்து வரும் நிலையில், அதற்கு முற்றிலும் மாறான ஒரு முன்மாதிரி சம்பவத்தை நிகழ்த்தி காட்டியுள்ளார் தமிழக வெற்றி கழகத்தின் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ இளங்கோவன்.

இளங்கோவன் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பாக, அவரது மகள் தேவமித்ரா அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்து வந்தார். தற்பொழுது அவர் தவெக சார்பில் எம்.எல்.ஏ-வாக பொறுப்பேற்ற பின்பும், தங்களின் ஆடம்பர கௌரவத்தை பார்க்காமல், தனது மகளை திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்த்துள்ளார். 

பதவிக்கு வந்தவுடன் பலரின் தரம் மாறும் இந்த அரசியல் சூழலில், எம்.எல்.ஏ ஆன பின்பும் அரசுப் பள்ளியிலேயே தனது மகளின் கல்வியைத் தொடர செய்த இளங்கோவனின் இந்த எளிய முடிவு பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று மேடைகளில் பேசுவதோடு நிறுத்தாமல், தனது சொந்த மகளையே அரசு பள்ளியில் சேர்த்து செயலில் காட்டியுள்ளார் இளங்கோவன். "இதுதான் உண்மையான மாற்றம்; தவெக அரசின் கொள்கைக்கான சான்று" என்று அக்கட்சியினரும் பொதுமக்களும் சமூக வலைத்தளங்களில் இவரைப் பாராட்டி வருகின்றனர்.