கென்யாவில் 9 மாதங்களின் பின் பாடசாலைகள் திறப்பு

05.01.2021 09:54:50

கொரோனா வைரஸ் தாக்கம் கென்யாவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து அந்நாட்டில் பாடசாலைகள் 9 மாதங்களின் பின் திறக்கப்பட்டுள்ளன.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் ஆபிரிக்க நாடுகளிலும் பரவியுள்ளது. ஆனால், பிற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆபிரிக்க நாடுகளில் இது பெருமளவு கட்டுப் படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் 2020 மார்ச் மாதத்தில் தான் வைரஸ் ஆபிரிக்க நாடுகளுக்கு பரவத் தொடங்கியது. குறிப்பாக, ஆபிரிக்க நாடான கென்யாவில் மார்ச் மாதத்துக்குப் பின்னரே கொரோனா பரவியது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டில் 2020 மார்ச் மாதம் முதலே பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டன. அந்நாட்டில் இதுவரை மொத்தமாக 97 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு இதுவரை 1,600 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது கென்யாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இந்நிலையில், வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து அந்நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, 9 மாதங்களின் பின் நேற்று கென்யாவில் பாடசாலைகள் திறக்கப்பட்டன. பாடசாலைகளுக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடைமுறையாக வகுப்புகளில் போதிய இடவசதி இல்லையென்றால் பாடசாலை கட்டிடத்தினுள்ளே மரத்தடி நிழலில் வைத்து வகுப்புகளை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

9 மாதங்களுக்குப் பின்னர் பாடசாலைகள் திறக்கப்பட்டதையடுத்து மாணவர்கள் ஆர்வத்துடன் பாடசாலைகளுக்கு சமுகமளித்திருந்ததாகக் கூறப்படுகிறது.