அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் குற்றவாளி
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹன்டா் பைடனை (Hunter Biden) குற்றவாளியாக அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
போதைப்பொருள் பழக்கம் இல்லை என பொய் கூறி கடந்த 2018 ஆம் ஆண்டு துப்பாக்கி வாங்கியமை உட்பட மூன்று வழக்குகளில் ஹன்டா் பைடன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் ஹன்டா் பைடனுக்கு அதிகபட்சமாக 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அந்நாட்டு சட்ட வல்லுநா்கள் தெரிவித்தனா்.
எனினும், முதல்முறை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுமா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசு உரிமம் பெற்ற துப்பாக்கி வியாபாரியிடம், தான் போதைப்பொருள் பயன்படுத்தாத நபா் என்ற விண்ணப்பத்தை ஹன்டா் பைடன் கடந்த 2018 ஆம் ஆண்டு சமா்ப்பித்து துப்பாக்கியை பெற்றுள்ளாா்.
பொய்யான தகவல்களை கூறி சட்டவிரோதமாக 11 நாட்கள் வரை அவா் துப்பாக்கியை பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை குற்றவாளியாக அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்தது.
அத்துடன், மேலாடையின்றி ஹன்டா் பைடன் அவரது அறையில் போதைப்பொருள் பயன்படுத்தும் புகைப்படங்கள் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டது. மேலும், அவா் கொகைன் பயன்படுத்தும் வீடியோ காட்சிகளையும் பாா்வையிட்ட நீதிபதி ஹன்டா் பைடன் குற்றவாளியாக அறிவித்தாா்.
மேலும், ஹன்டா் பைடனுக்குச் சொந்தமான லொறியொன்றில் துப்பாக்கி இருப்பதைக் கண்டு அச்சமடைந்ததால் அதை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்ததாகவும் அதை தெருவில் இருந்த நபா் எடுத்ததாகவும் ஹன்டா் பைடனின் மறைந்த சகோதரா் பியு பைடனின் மனைவி ஹல்லி பைடன் நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.
குறித்த நபரிடமிருந்து துப்பாக்கியை கைப்பற்றிய பொலிஸார், இவ்விடயம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதனிடையே, 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி தோ்தலுக்கு முன்னா் தன்னைப் பற்றிய இரகசியங்களை மறைப்பதற்காக நடிகைக்குப் பணம் அளித்த விவகாரத்தில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பும் மேன்ஹாட்டான் நீதிமன்றத்தால் அண்மையில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவில் இவ்வாண்டு இறுதியில் ஜனாதிபதி தோ்தல் நடைபெறவுள்ளநிலையில், அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாகவே தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஹன்டா் பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகிய இருவருமே தெரிவித்து வருகின்றனா்.