இஸ்ரேல் பிரதமர் வீட்டில் ட்ரோன் தாக்குதல்
இஸ்ரேல் - ஹெஸ்புல்லா இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில், ஹமாஸ்க்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹெஸ்புல்லா அமைப்பும் வடக்கு இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதனால் ஹெஸ்புல்லாவை தாக்குவதாக லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பொதுமக்களும் பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில் ஹெஸ்புல்லாவும் இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அவ்வாறாக இஸ்ரேலின் கடற்கரை நகரமான செசாரியாவில் அமைந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் வீட்டின் மீது ஹெஸ்புல்லா அமைப்பினர் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஆனால் ட்ரோன்களை இஸ்ரேல் பாதுகாப்பு படை அழித்ததால் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது
இந்த கொலை முயற்சி குறித்து பேசியுள்ள நேதன்யாகு ”என்னையும், எனது மனைவியையும் படுகொலை செய்ய ஈரானின் பினாமி அமைப்பு ஹெஸ்புல்லா மேற்கொண்ட முயற்சி ஒரு பெரிய தவறு. இது என்னையும், இஸ்ரேல் அரசையும் பாதுகாப்பதற்காக எதிரிகளுக்கு எதிராக நடத்தி வரும் நியாயமான போரிலிருந்து நம்மை பின்வாங்க செய்யாது” என்று எச்சரித்துள்ளார்.
இந்த தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் இஸ்ரேல் ராணுவம் வடக்கு காசாவிலும், லெபனானின் தலைநகர் பெய்ரூட் மீதும் குண்டுமழை பொழிந்துள்ளது. இத்ல் 73 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.