சவால்களை ஏற்று விவாதத்திற்கு வருமாறு சஜித் சவால்!

23.04.2024 14:17:01

மே மாதத்தில் தேசிய மக்கள் சக்தியுடனான விவாதங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

 

அம்பாந்தோட்டை, வீரகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடிதம் எழுத வேண்டிய தேவையில்லை. மே மாதம் இரண்டு விவாதங்களுக்கும் நாங்கள் தயார்.

நளின் பண்டார பொருளாதாரத் துறையில் விவாதத்திற்கு வருமாறு சகோதரர்களுக்கு சவால் விடுத்த போது, பொருளாதார நிபுணர்களின் விவாதத்தில் இருந்து தப்பிய சகோதரர்கள் மீண்டும் தலைவர்களுக்கு இடையில் விவாதத்திற்கு வருமாறு சவால் விடுத்தனர்.

பொருளாதார வல்லுநர்கள் மற்றும் தலைவர்களுக்கு இடையிலான இரண்டு விவாதங்களுக்கும் நாம் தயார்.

இதிலிருந்து தப்பி ஓடாமல், இந்த இரண்டு சவால்களையும் ஏற்றுக்கொள்ளுமாறும், கோழைகளாக தப்பித்து ஓடாது, விவாதத்திற்கு வருமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.

பொருளாதார வல்லுநர்கள் மத்தியிலான விவாதத்திற்கு முடியாது என கூறுவது அவர்களின் பொருளாதார வல்லுனர்களால் நாட்டுக்கான சரியான பொருளாதார பார்வையை முன்வைக்க முடியாமையினாலா என்ற பிரச்சினை எழுகிறது.

எனவே, கடிதம் அனுப்பாமல் மே மாதம் இரு விவாதங்களுக்கும் வாருங்கள். அதே போல் விவாதங்கள் நடத்துவது போலவே, வெறும் வாய்வீராப்பு காட்டாமல் மக்களுக்கு சேவை செய்து காட்டுங்கள்.