
கொடூரமான புதிய தண்டனைக்கு ஒப்புக்கொண்ட நாடு!
சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த வழக்கில், மடகாஸ்கரில் உள்ள ஒரு நீதிமன்றம் குற்றவாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்ய தண்டனை விதித்துள்ளது. 2024ல் நடந்த இச்சம்பவத்தில் இந்தியப் பெருங்கடல் தீவு நாடு இதுபோன்ற கொடூரமான புதிய தண்டனைக்கு ஒப்புதல் அளிப்பது இதுவே முதல் முறை. இமெரின்சியாடோசிகா பகுதியில் ஆறு வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்து கொலை செய்ய முயன்றதாக இந்த வழக்கு முன்னெடுக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் குற்றவாளிக்கு நீதிமன்றத்தால் கடின உழைப்புடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது, அதனுடன் ஆண்மை நீக்கம் செய்யவும் தீர்ப்பானது. |
மடகாஸ்கரில் 10 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய சிறுமிகளை துஸ்பிரோகம் செய்யும் குற்றவாளிகளுக்கு 2024 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சட்டத்தின் ஒரு பகுதியாக அறுவைசிகிச்சை ஊடாக ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனை அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. நீதிமன்றங்களில் இதுபோன்ற பல வழக்குகளைப் பதிவு செய்த நிலையில், இப்படியான ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்தியதாக அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. இன்றைய தீர்ப்பு நீதி அமைப்பிலிருந்து ஒரு வலுவான மற்றும் குறிப்பிடத்தக்க பதிலாகும், மேலும் இதேபோன்ற தீங்கிழைக்கும் நோக்கங்களைக் கொண்ட எவருக்கும் ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கும் என மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அட்டர்னி ஜெனரல் டிடியர் ரசாஃபின்ட்ராலம்போ தெரிவித்துள்ளார். செக் குடியரசு மற்றும் ஜேர்மனியில் சில பாலியல் குற்றவாளிகளுக்கு பிரதிவாதியின் ஒப்புதலுடன் அறுவை சிகிச்சை ஊடாக ஆண்மை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறார்களுக்கு எதிரான சில பாலியல் குற்றங்களுக்காக ஆண்மை நீக்கம் செய்யும் நடைமுறையை கட்டாயமாக்கிய முதல் அமெரிக்க மாகாணமாக லூசியானா கடந்த ஆண்டு மாறியது. ரசாயன முறைப்படி ஆண்மை நீக்கம் என்பது பொதுவாக மருந்துகளை தொடர்ச்சியாக வழங்குவதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது, ஆனால் பெரும்பாலும் இது மீளக்கூடியது. இப்படியான தண்டனைகள் அமெரிக்காவின் பல மாகாணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போலந்து மற்றும் தென் கொரியாவிலும் ரசாயன முறைப்படி ஆண்மை நீக்கம் அமுலில் உள்ளது. பிரித்தானியாவிலும் இதுபோன்ற தண்டனையை கட்டாயமாக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் வழக்கம் போலவே மனித உரிமைகள் ஆர்வலர்கள் ரசாயன முறைப்படியும் மருத்துவ ரீதியாகவும் ஆண்மை நீக்கம் தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். |