எனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் டாப்-3 பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்கும்: பிரதமர் மோடி வாக்குறுதி

26.07.2023 18:49:17

எனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் டாப்-3 பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்கும்: பிரதமர் மோடி வாக்குறுதி

இரண்டாவது பதவிக்காலத்தில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது. பிரகதி மைதானத்தில் உள்ள சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம், பாரத மண்டபம் என மறுபெயரிடப்பட்டுள்ளது. புதுடெல்லி:

டெல்லி பிரகதி மைதானத்தில் வரும் செப்டம்பர் மாதம் ஜி-20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி பிரகதி மைதானத்தில் புதுப்பிக்கப்பட்ட சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த மையத்திற்கு பாரத மண்டபம் என பெயரிடப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:- இந்தியாவின் உள்கட்டமைப்பு மாறுகிறது. உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம், மிக உயரத்தில் உள்ள மிக நீளமான சுரங்கப்பாதை இந்தியாவில் உள்ளது, மிகவும் உயர்ந்த போக்குவரத்து சாலை, மிகப்பெரிய அரங்கம், மிகப்பெரிய சிலை.. இவை அனைத்தும் இந்தியாவில் உள்ளது. அதனுடன் பொருளாதார வளர்ச்சியும் வேகமாக இருக்கும்.

எங்களது முதல் ஆட்சிக் காலத்தில், பொருளாதாரத்தில் இந்தியா 10வது இடத்தில் இருந்தது. இரண்டாவது பதவிக்காலத்தில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது. இந்த சாதனைகளை அடிப்படையாக வைத்து பார்த்தால், மூன்றாவது ஆட்சிக்காலத்தில் பொருளாதாரம் உலகின் முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கும். எனது மூன்றாவது பதவிக்காலத்தில், இந்தியா முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும். இது மோடியின் உத்தரவாதம்.

எங்கள் அரசாங்கம் கடந்த 9 ஆண்டுகளில் 40 ஆயிரம் கி.மீ. ரெயில் பாதைகளை மின்மயமாக்கி உள்ளது. ஆனால் முந்தைய அரசாங்கங்கள் கடந்த 60 ஆண்டுகளில், 20,000 கிமீ ரெயில் பாதைகளை மட்டுமே மின்மயமாக்க முடிந்தது. இப்போது ஒவ்வொரு மாதமும் 6 கி.மீ. அளவுக்கு மெட்ரோ பாதையை முடிக்கிறோம், 4 லட்சம் கி.மீ. கிராம சாலைப் பணிகளை முடிக்கிறோம். விமான நிலையங்களின் எண்ணிக்கை 150ஐ எட்டியிருக்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். பிரகதி மைதானத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த வளாகமானது, மாநாட்டு மையம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி அரங்கம் போன்ற பல அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ளது. சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம், இப்போது பாரத மண்டபம் என மறுபெயரிடப்பட்டுள்ளது. அத்துடன், இதன் திறப்பு விழாவில் கடந்த 10 ஆண்டுகளின் வளர்ச்சியை, சுதந்திரத்திற்குப் பிந்தைய 60 ஆண்டுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியுடன் ஒப்பிட்டு பிரதமர் பேசியிருக்கிறார். இதன்மூலம், வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் களத்தின் தளமாக இந்த பாரத மண்டபம் மாறியிருக்கிறது.