
ஆஸ்திரிய பாடசாலையில் துப்பாக்கிச் சூடு.
ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் கிரேஸ் நகரில் உள்ள ஒரு உயர்நிலைப் பாடசாலையில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 10:00 மணியளவில், மர்ம நபர் ஒருவர் குறித்த பாடசாலைக்குள் திடீரென நுழைந்து, அங்கிருந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் நோக்கி கண்மூடித் தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்டுள்ளார்.
இத்தாக்குதலில் ஒன்பது மாணவர்கள், ஒரு ஆசிரியர் என 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்தினையடுத்து அங்கு வருகை தந்த பொலிஸார், பாடசாலையில் சிக்கியிருந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், 21 வயதான அப் பாடசாலையின் முன்னாள் மாணவர் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பொலிஸார் இது தொடர்பான தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆஸ்திரிய அரசு 3 நாட்கள் தேசிய துக்கத்தை அனுஷ்டிக்கப் போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.