எலான் மஸ்க் வசம் செல்கிறது டுவிட்டர்

14.09.2022 10:43:11

டுவிட்டர் நிறுவனத்தை உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்கிடம் விற்க அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். பங்குதாரர்களின் முடிவை எலான் மஸ்க் ஏற்பாரா என்பது விரைவில் தெரியவரும்.

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை, ரூ.3.34 லட்சம் கோடிக்கு வாங்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இதற்கான ஒப்பந்தம் நிறைவடையவில்லை. டுவிட்டரில் 20 சதவீத கணக்குகள் போலி எனவும், 5 சதவீதத்திற்கும் குறைவாக போலி கணக்குகள் உள்ளது என்ற ஆதாரத்தை நிரூபிக்காததால் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்தார். இதனை எதிர்த்து டுவிட்டர் நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அக்டோபரில் விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையே டுவிட்டர் நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கையும் தலா 54.20 டாலருக்கு வாங்கிக் கொள்வதாக எலான் மஸ்க் கூறியிருந்தார். இதற்கு டுவிட்டர் பங்குதாரர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நடைபெற்ற டுவிட்டர் பங்குதாரர்கள் கூட்டத்தில், ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலானோர் டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்கிடம் விற்க ஒப்புதல் அளித்தனர். எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தபோது டுவிட்டர் பங்கு விலை அமெரிக்க பங்குச்சந்தையில் 41.8 டாலராக குறைந்தது.

இந்த நிலையில், பங்குதாரர்கள் எலான் மஸ்கிடம் விற்க சம்மதம் தெரிவித்ததை அடுத்து அந்நிறுவனத்தின் பங்குகள் தற்போது அதிகரிக்க துவங்கியுள்ளன. பங்குதாரர்கள் விற்க முன்வந்தாலும், எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க சம்மதிப்பாரா அல்லது வழக்கம்போல பின்வாங்குவாரா என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.