உருமாறிய நடிகர் விக்ரம்

18.04.2023 07:48:32

கதாபாத்திரத்துக்காக உடலை வருத்தி உருமாறி நடிப்பவர் விக்ரம். முந்தைய சேது, காசி, அந்நியன், தெய்வத்திருமகள், ஐ, கடாரம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் இதனை நிரூபித்து இருக்கிறார். தற்போது நடித்து வரும் தங்கலான் படத்திலும் அடையாளம் தெரியாமல் மாறிப்போய் இருக்கிறார். விக்ரம் தனது தோற்றத்தை மாற்றி நடிக்கும் வீடியோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டு உள்ளனர். அதில் மேல் சட்டை அணியாமல் வேட்டியை கோவணம்போல் கட்டிக்கொண்டு கையில் ஆயுதம் ஏந்தி மிடுக்காக விக்ரம் வரும் காட்சிகளும், மக்களும் குதிரைகளும் பாய்ந்து ஓடும் காட்சிகளும் இடம்பெற்று உள்ளன. வீடியோவை பார்த்த திரையுலகினரும் ரசிகர்களும் சினிமா வாழ்க்கையில் விக்ரமுக்கு இது முக்கிய படமாக இருக்கும் என்றும் அவருக்கு விருதுகள் கிடைக்கலாம் என்றும் வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். விக்ரமை தங்கலான் தோற்றத்துக்கு மாற்ற பல மணிநேரம் மேக்கப் போட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் தங்கலான் படத்தில் நடிக்கிறார்கள். 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து இருப்பதாக கூறப்படுகிறது. சுதந்திரத்துக்கு முன்பு கோலார் தங்க வயலில் தமிழர்களை அடிமைகளாக வைத்திருந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது.