தமிழ் படத்தில் 5 ஆண்டுகளுக்கு பின் நடிக்கும் நதியா

24.02.2021 10:43:55

கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த நதியா, தற்போது பிரபல இயக்குனரின் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

தமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி தனித்துவமான நடிப்பால் 1980-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா. தமிழில் பல வெற்றி படங்களில் நடித்த நதியா, மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

1988-ல் சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி அமெரிக்காவில் குடியேறினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு 2004-ல் ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். தொடர்ந்து அக்கா, அம்மா, அண்ணி என்று குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். 

கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த நதியா, தற்போது லிங்குசாமி இயக்கும் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக உள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.