
கிறிஸ்டினா பெர்னாண்டஸ் அமெரிக்காவில் நுழைய தடை.
முன்னாள் அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் அமெரிக்காவில் நுழைய அந்நாட்டின் அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிறிஸ்டினா பெர்னாண்டஸ் மீது ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகள் விதிக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
தென் அமெரிக்க நாட்டான அர்ஜென்டினாவின் முக்கிய அரசியல் தலைவரான கிறிஸ்டினா பெர்னாண்டஸ் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அந்நாட்டின் நீதிமன்றம் 2022 ஆம் ஆண்டில் நிரூபித்தது. இதன் காரணமாக, அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்க அரசின் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அதிபர் கிறிஸ்டினா தனது பதவியை தவறாக பயன்படுத்தி 30 ஒப்பந்தங்கள் மூலம் ஊழலில் ஈடுபட்டதாகவும், இதனால் அர்ஜென்டினா அரசுக்கு சொந்தமான பல மில்லியன் டாலர் பணம் திருடப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். எனவே, அவர் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து, அவருக்கு அமெரிக்காவில் நுழைவு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்துவரும் முன்னாள் அதிபர் கிறிஸ்டினா, 2024 ஆம் ஆண்டு அர்ஜென்டினா நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், அங்கும் அவரது சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டது. மேலும், அவர் எதிர்கால தேர்தல்களில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.