இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்தது தாய் ஏர்வேஸ்
நான்கு வருடங்களின் பின் தாய்லாந்து விமான நிறுவனமான “தாய் ஏர்வேஸ்” இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், குறித்த நிறுவனத்தின் TG 307 என்ற விமானமானது நேற்று திங்கட்கிழமை (01) இரவு 11.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் தாய்லாந்து பிரஜைகள் உட்பட சுமார் 150 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகள் நாளாந்தம் இயங்கி வருவதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானத்தையும் அதன் பயணிகளையும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வரவேற்றார்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கருத்து தெரிவிக்கையில்,
2024 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 800,000 விமானப் பயணிகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய சேவைகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்கள்.
தாய் ஏர்வேஸ் நாளாந்த விமான சேவையை அறிமுகப்படுத்துவது சுற்றுலாப் பயணிகளின் வருகையை மேலும் அதிகரிக்கும். விமானக் கட்டணங்கள் குறைக்கப்பட்டால் இலங்கைப் பயணிகளை தாய்லாந்திற்குச் செல்வதற்கு ஈர்க்க முடியும் என்றும், அதன் மூலம் இருதரப்பு சுற்றுலாவை மேம்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.